“தெருநாய்களும் குடும்பத்தில் ஒருவர்தான்” – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவேசம்!

“தெருநாய்களும் குடும்பத்தில் ஒருவர்தான்” – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவேசம்!

சென்னையில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், “தெருநாய்களும் குடும்பத்தில் ஒருவர்தான்” என்று வலியுறுத்திப் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தெருநாய்களையும் பிடித்துப் பராமரிப்பு மையங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும், நாடு முழுவதும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் சதா, வேதிகா மற்றும் கனிகா ஆகியோரும் இந்த உத்தரவு தெருநாய்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

“அனைவருக்கும் விலங்குகள் மீது அன்பு இருக்கும். பலர் குறிப்பாகத் தெருநாய்களைக் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள். அந்தப் பிணைப்பை உடைப்பது சரியல்ல. விலங்குகளின் உணர்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஒருவித நிம்மதியை அளித்தாலும், விலங்கு பிரியர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், சட்டரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.