இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் கீழ், நாடு கடத்தப்பட்ட ஏழு புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு வந்துள்ளனர் என்று ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது.
ருவாண்டா அரசு இந்த ஒப்பந்தம் குறித்து ஆகஸ்ட் மாதம் தெரிவித்தபோது, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 250 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாகக் கூறியிருந்தது. ஆனால், இந்த ஏழு புலம்பெயர்ந்தோரின் அடையாளம், அவர்களது நாட்டினங்கள் பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ருவாண்டாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நாடு கடத்தப்பட்ட ஏழு பேரில் மூவர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர், மற்ற நால்வர் ருவாண்டாவில் தங்கி வாழ விரும்புகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரிட்டனுடனும் இதேபோன்ற ஒப்பந்தம் ஒன்றை ருவாண்டா மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்திற்கு சட்ட ரீதியான சிக்கல்கள் எழுந்ததால் அது கைவிடப்பட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த நாட்டுடன் தொடர்பில்லாத மூன்றாம் நாடுகளுக்கு அனுப்புவது மனித உரிமைகளை மீறுகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.