ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களில் தீ விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன் பாகங்கள் விழுந்ததால், சில அடுக்குமாடி கட்டிடங்களில் தீப்பிடித்ததாகவும், அவற்றில் சில பகுதிகள் சேதமடைந்ததாகவும் கீவ் நகர மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
கீவ்வின் ஸ்வியாட்டோஷின்ஸ்கி மற்றும் டார்னிட்ஸ்கி மாவட்டங்களில் இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என கூறப்படுகிறது. அடுக்குமாடி கட்டிடங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் பல ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்திய போதிலும், சில ட்ரோன்கள் இலக்கைத் தாக்கி சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.