இருவரை கல்லால் தாக்கி கொன்ற சைக்கோ கொலையாளி!

இந்த செய்தியை பகிருங்கள்

புதுவை அருகே 2 பேரை கல்லால் தாக்கி கொலை செய்த சைக்கோ நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவை அருகே கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த கடையின் அருகில் சிமெண்ட் கடை மற்றும் டீ கடை உள்ளது. இரவு நேரங்களில் அங்கு பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடிக்கும் சிலர் தூங்குவது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவு அந்த கடைகள் முன்பு 2 பேர் படுத்து தூங்கினர். நள்ளிரவு 2 மணியளவில் ஒரு சைக்கோ நபர் அங்கு வந்தார். அவர் அங்கு தூங்கிகொண்டிருந்த ஒருவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.50 மட்டுமே உள்ளது. அந்த பணத்தை தர முடியாது என மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சைக்கோ நபர் அங்கு கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து பணம் தர மறுத்தவரை சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதனை கண்ட அவருடன் தூங்கி கொண்டிருந்த மற்றொருவர் அதிர்ச்சியடைந்து கல்லால் தாக்கிய சைக்கோ நபரை தட்டிக்கேட்டார். அவரையும் அந்த நபர் கல்லால் தலையில் தாக்கினார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், தமிழரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திலேயே நின்றுக்கொண்டிந்த கொலையாளியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குட்டியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது45). என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சுற்றிதிரிந்து வந்ததும் தெரியவந்தது. மனநோயாளியான இவர் மேலும் 3 பேரை கொலை செய்ய உள்ளதாக போலீசாரிடம் கூறிக்கொண்டே இருந்தார்.

இதற்கிடையே கிருமாம்பாக்கம் அருகே நரம்பை சுடுகாட்டில் ஒருவர் இன்று காலை ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் கொலை செய்யப்பட்ட 2 பேரும் யார்-எந்த ஊர் என்பது தெரியவில்லை. இருவரையும் சைக்கோ நபரான மணிகண்டன்தான் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சைக்கோ நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்ற விவரம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிருமாம்பாக்கத்தில் இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us