காவல்துறையினர் சாதிய மோதல் சம்பவங்களை நடைபெறாமல் தடுக்க வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு

இந்த செய்தியை பகிருங்கள்

சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் போதிய விழிப்புடன் செயல்பட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விழுப்புரம் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். விழாவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடம் நேரடியாக பெறப்படும் குறைதீர் மனுக்களின் தன்மை மற்றும் அம்மனு மீதான நடவடிக்கைகள் குறித்து கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுதல், காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு போன்றவற்றில் திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் விழாவில் சைலேந்திரபாபு பேசியதாவது: நான் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் சரகத்தில் பணியாற்றியிருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு சாதிய மோதல்கள், குற்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அப்போது, அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின் கடந்த 10 ஆண்டுகளில், வட மாவட்டங்களில் பெரிய அளவிலான சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறவில்லை. இருப்பினும், காவல்துறையினர் போதிய விழிப்புடனும், துரிதமாகவும் செயல்பட வேண்டும். சாதிய மோதல் சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பவம் நடைபெறும் இடத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் நேரில் சென்று, அது பெரிதாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறினால், அது கலவரமாகவும், கொலை களமாகவும் மாறிவிடும். எனவே, காவல்துறையினர் எப்போதும் துரிதமாக செயல்பட ஒருபோதும் தயங்க கூடாது.சம்பவம் நடைபெறும் இடத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் தங்கியிருந்து, அந்த பிரச்சினை மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சனை பெரிதாக வாய்ப்பில்லை என்று திரும்பி வந்துவிட்டால், அந்த பிரச்சனை பெரிதாகி, ஒரு வார காலம் காவல்துறையினர் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us