பிரிட்டன் ராணுவம் முதன்முறையாக ஒரு புரட்சிகரமான கதிரியக்க அலை ஆயுதத்தைப் பயன்படுத்தி, கொடிய டிரோன்கள் கூட்டத்தை வானில் நொடியில் அழித்து சாதனை படைத்துள்ளது. கண்ணுக்குப் புலப்படாத ரேடியோ அலைகள் மூலம் டிரோன்களின் மின்னணு சுற்றுகளை குறிவைத்து செயலிழக்கச் செய்யும் இந்த அதிநவீன தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறையில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.
புடினின் தந்திரத்திற்கு முற்றுப்புள்ளி !
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனின் வான் பாதுகாப்பை முறியடிக்க டிரோன் கூட்டங்களை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், பிரிட்டனின் இந்த புதிய ஆயுதம், பிரிட்டிஷ் மற்றும் உக்ரைன் துருப்புக்களுக்கு இந்த தந்திரத்தை திறம்பட எதிர்கொள்ள உதவும் என நம்பப்படுகிறது.
வானில் நடந்த அதிரடி சோதனை!
பிரிட்டன் படைகள் நடத்திய மிகப்பெரிய டிரோன் எதிர்ப்பு பயிற்சியில், இந்த கதிரியக்க அலை ஆயுதம் வானில் பறந்த டிரோன்களின் மின்னணு அமைப்புகளை துல்லியமாக தாக்கி அழித்தது. ரேடியோ அதிர்வெண் நேரடி ஆற்றல் ஆயுதம் (RF DEW) தாக்கிய நொடியில் டிரோன்கள் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பாக தரையில் விழுந்தன. ஒரு முறை சுடுவதற்கு வெறும் 10 பென்ஸ் மட்டுமே செலவாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
அதிநவீன தொழில்நுட்பத்தின் அபார சக்தி!
RF DEW அமைப்புகள் அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. இது எந்தவொரு மின்னணு அமைப்பையும் உடனடியாக செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. தற்போது இதன் தாக்கும் தூரம் 1 கி.மீட்டராக இருந்தாலும், கூடுதல் ஆராய்ச்சியின் மூலம் இதை மேலும் அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நொடியில் நான்கு டிரோன்கள் காலி!
மேற்கு வேல்ஸில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் சோதனைகளில், RF DEW அமைப்புகள் ஒரே நேரத்தில் நான்கு டிரோன்களை அழித்தன. இதன் தாக்கம் மின்னல் வேகத்தில் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த புரட்சிகரமான ஆயுதம், எதிர்கால போர்களின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். டிரோன் அச்சுறுத்தலுக்கு பிரிட்டன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.