உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை முதன்முதலில் வெளிப்படுத்திய சீன மருத்துவர், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
வைரஸ் பரவல் குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததற்காக ஏற்கனவே சிறை சென்று, சமீபத்தில் விடுதலையான மருத்துவர், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். உலகையே ஸ்தம்பிக்க வைத்த கொரோனா வைரஸ் குறித்து, அவர் அளித்த எச்சரிக்கைகள் சீன அரசால் முதலில் நிராகரிக்கப்பட்டன. பின்னர், இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக, ‘வதந்திகளைப் பரப்பியதாக’ குற்றம்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
தற்போது, அந்த மருத்துவர் ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டதாக’ குற்றம்சாட்டப்பட்டு, மீண்டும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
இந்த விவகாரம், சீன அரசின் அடக்குமுறைக்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா குறித்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக, ஒரு மருத்துவர் இப்படி பழிவாங்கப்படுவது உலக அளவில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கைது, சீனாவின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.