உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிள்ளையானுக்கு முடிச்சு! கத்தோலிக்க திருச்சபை பகீர் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நிராகரிக்க முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஆசாத் மௌலானா முதன்முதலில் வெளிப்படுத்தியதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிள்ளையானுடன் நெருக்கமாக பணியாற்றியவரே ஆசாத் மௌலானா எனவும், அவரே பிள்ளையானின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிள்ளையான் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு உள்ள தொடர்பை கத்தோலிக்க திருச்சபை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை என்றும், இந்த கைது மற்றும் விசாரணை எந்த அளவிற்கு செல்லும் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும், அது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கே வெளிச்சம் என்றும் சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை முடிந்தவுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை தொடங்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் இந்த பகீர் தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.