மர்மம் சூழ்ந்த தங்காலை ஹெரோயின் சம்பவம்! – மூன்று பேர் பலி; இரண்டு சடலங்கள், ஒரு லொறி ஓனர் உயிரிழப்பு!
தங்காலை சீனிமோதரை பகுதியில் நடந்த பெரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் மர்மமான முறையில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு லொறியும், 10 பொதிகள் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயங்கரம் நிறைந்த காலைப் பொழுது!
சீனிமோதரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறிது நேரத்தில், அந்த இரண்டு சடலங்களுடன் தொடர்புடைய மூன்றாவது நபரான துசித் வேனுர குமார, தங்காலை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்ற செய்தி கிடைத்தது.
மூன்று உயிர்கள் – ஒரு மர்ம முடிச்சு!
உயிரிழந்தவர்கள் சுவந்தஹன்னடீக துசித் வேனுர குமார (50), டபிள்யூ. இ. கவிந்து கல்ஹார மற்றும் தினுக லக்ஷான் ஹெவவிதாரண என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லொறி ஓனரின் மர்ம மரணம்!
லொறி உரிமையாளரான துசித், தனது குடும்பத்தினரிடம் சீனிமோதரைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இரவில், தனக்கு வயிற்றுவலி இருப்பதாக தனது மகனுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். மகனும் அவரை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர், “அபாயம் இல்லை” என கூறி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், வீடு திரும்பியதும் அவரது உடல்நிலை மோசமாகி, தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
மகன்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தகவல் அறிந்ததும், மகன்கள் இருவரும் லொறியை எடுத்து வர சீனிமோதரை வீட்டிற்குச் சென்றபோது, அங்கே தரையில் இரண்டு சடலங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களைத் தாக்கி விரட்டியுள்ளது. காயமடைந்த மகன்கள் இருவரும் பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள்!
இதேவேளை, கத்துருபொகுண பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் மற்றொரு லொறியை பொலிஸார் கைப்பற்றினர். அதில், 86 கிலோ ஐஸ், 100 கிலோ ஹெரோயின், ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு T-56 ரக துப்பாக்கி ஆகியவையும் இருந்தன.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மூன்று பேரின் மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும். இந்த மர்மமான சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.