கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட மியான்மர் போர் நிறுத்தம் இன்று செவ்வாய்க்கிழமை முடிவடைவதால், நிவாரணக் குழுக்கள் மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் நிவாரண முயற்சிகளை எளிதாக்குவதற்காக போர் நிறுத்தத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த இராணுவ ஆட்சிக்குழு, 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து தனது எண்ணற்ற ஆயுதமேந்திய எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த பூகம்பத்தில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், போர் கண்காணிப்பாளர்கள் மற்றும் போர் மண்டலங்களில் வசிக்கும் மக்கள், உதவிப் பொருட்களை வழங்குவதற்காக மியான்மரின் மத்திய பகுதியில் அறிவிக்கப்பட்ட 20 நாள் போர் நிறுத்தத்தின்போதும் இரு தரப்பிலும் சண்டை தொடர்ந்ததாக கூறுகின்றனர். இன்று நள்ளிரவு (1730 GMT) இந்த போர் நிறுத்தம் முடிவடைய உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை அரசு ஊடகங்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளரை AFP செய்தி நிறுவனத்தால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இரண்டு மில்லியன் மக்கள் “உதவி மற்றும் பாதுகாப்பின் அவசரத் தேவை” உள்ள நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான சண்டைகள் இருந்தபோதிலும், மனிதாபிமானக் குழுக்கள் மற்றும் பிராந்திய சக்திகள் நான்காவது வாரமாகத் தொடரும் உதவி முயற்சிகளுக்காக போர் நிறுத்தத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
வியாழக்கிழமை, இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தாய்லாந்தின் பாங்காக்கிற்குச் சென்று 10 நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவரும், மலேசிய பிரதமருமான அன்வார் இப்ராஹிமை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது ஆசியான் அமைப்பின் சுழற்சி முறையிலான தலைவர் பதவியை வகிக்கும் அன்வார், பூகம்பத்திற்குப் பிறகு மியான்மரின் எதிர்க்கட்சியான “தேசிய ஒற்றுமை அரசாங்கத்திடமும்” பேசியதாகவும், அவர்களும் இதேபோன்ற போர் நிறுத்தத்திற்கு உறுதியளித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், இரு தரப்பினரும் “சண்டையை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க தேவையான அனைத்தையும் செய்ய ஒப்புக்கொண்டதாக” தெரிவித்தார். போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைவதால், மியான்மரில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.