ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கும், நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கும் உண்மையான நீதியைப் பெற்றுத்தர வேண்டுமானால், இந்த நாட்டில் புற்றுநோய் போல் பரவி வரும் வெறித்தனமான இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசமாக தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து அப்படிப்பட்ட எந்தவொரு திட்டமும் காணப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை உடனடியாக அடையாளம் காண உறுதியளித்து பல்வேறு மேடைகளில் மீண்டும் மீண்டும் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு புலப்படும் ஏற்பாடுகளோ அல்லது உறுதியான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்று தேரர் சாடினார். “வருத்தத்துடன் நான் கூற வேண்டியுள்ளது, 1990 களில் இருந்து உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புடைய, இதற்காக பயிற்சி பெற்ற, இதற்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய அனைத்து குழுக்களும் இன்று வெட்கமின்றி இந்த அரசாங்கத்துடன் உள்ளனர்,” என்று தேரர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும் தேரர் கூறுகையில், “ஏப்ரல் 11 ஆம் தேதி ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாது என்றும் அவர் உறுதியளித்தார்.” யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியாவில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளில், நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என்று கூறியதை சுட்டிக்காட்டிய தேரர், ஜனாதிபதியின் தொடர்ச்சியான ‘இனவாதம்’ என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு கேள்வி எழுப்பினார். “‘இனவாதம்’ என்று அவர் குறிப்பிடுவது உண்மையில் என்ன?” என்று வினவிய தேரர், ஜனாதிபதி இனவாதம் மற்றும் மத அடையாளம் என்பதன் அர்த்தத்தை தெளிவாக வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எனவே, ஈஸ்டர் தாக்குதல்களை அரசியல்மயமாக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார். அவ்வாறு செய்வது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் உண்மையான அடையாளங்களை மறைக்க உதவக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதாகவும், உண்மையான குற்றவாளிகள் இன்னும் நீதியின் கைகளில் சிக்கவில்லை என்றும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஞானசார தேரரின் இந்த காட்டமான கருத்துக்கள் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.