நேட்டோ கூட்டமைப்பின் 32 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் கடந்த ஆண்டு தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீத பாதுகாப்பு செலவின இலக்கை எட்டியுள்ளதாக நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்த இலக்கை இரட்டிப்பாக்க வலியுறுத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் 2022 உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் தங்கள் இராணுவ பட்ஜெட்டை அதிகரித்துள்ளன. நேட்டோ 2 சதவீதத்தை குறைந்தபட்ச செலவின இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஜூன் மாத உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, வாஷிங்டனின் நட்பு நாடுகள் தங்கள் GDP யில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற புதிய இலக்கை நிர்ணயிக்க டிரம்ப் அழுத்தம் கொடுக்கிறார். இது தற்போதைய அமெரிக்க செலவினத்தை விட மிக அதிகம். தங்களது சொந்த பாதுகாப்பிற்காக போதுமான அளவு செலவு செய்யாத நாடுகளை பாதுகாக்க உதவ மறுக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் 23 நாடுகள் 2 சதவீத இலக்கை எட்டும் என்று நேட்டோ முன்னதாக கணித்திருந்தது. ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த செலவினம் மற்றும் கனடா கடந்த ஆண்டு 19 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்ததாக நேட்டோ தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹேக்கில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, செலவின இலக்கை எட்டாத பல நாடுகள் அதை அதிகரிக்க உறுதியளித்துள்ளன. இந்த ஆண்டு 2 சதவீத இலக்கை எட்ட 10 பில்லியன் யூரோக்களுக்கு மேல் முதலீடு செய்வதாக ஸ்பெயின் இந்த வாரம் அறிவித்தது. அமெரிக்கா நேட்டோவில் மிகப்பெரிய இராணுவ செலவினையாளராக உள்ளது. கடந்த ஆண்டு, டாலர் மதிப்பில் மொத்த பாதுகாப்பு செலவினத்தில் 64 சதவீதம் அமெரிக்காவினுடையது. டிரம்ப்பின் இந்த அதிரடி கோரிக்கை நேட்டோ நாடுகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்த இலக்கை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.