இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாகக் கூறப்படும் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அணு ஆயுத வல்லமை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது நாளாக நேற்றும் (சனிக்கிழமை) துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டன. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
இந்திய இராணுவம் கூறுகையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் 740 கி.மீ (460 மைல்) நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பாகிஸ்தான் இராணுவத்தின் பல நிலைகளில் இருந்து “தூண்டுதல் இல்லாத” சிறிய ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதற்கு இந்திய துருப்புக்கள் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை நள்ளிரவு வாக்கில் பாகிஸ்தான் துருப்புக்கள் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்திய இராணுவம் கூறியுள்ளது. இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் வரவில்லை.
காஷ்மீர் பொலிஸார் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த தாக்குதலை நடத்தியதாக இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காட்டியுள்ளனர். பாகிஸ்தான் இந்த தாக்குதலில் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியதுடன், சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் பகிர்வை ஒழுங்குபடுத்தும் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல தசாப்த கால போர் நிறுத்த உடன்பாடு உள்ளது. ஆனால் இரு நாட்டு துருப்புக்களும் அவ்வப்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளும் காஷ்மீரை உரிமை கோருகின்றன. மேலும், அவர்கள் மூன்று முறை போரிட்டதில் இரண்டு போர்கள் காஷ்மீருக்காகவே நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.