பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் குமார் கடும் கண்டனம்! ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அழைப்பு!

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கோரமான பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் திங்களன்று நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழாவுக்குப் பின்னர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்தார்.

அத்துடன், மக்கள் ஒருவருக்கொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு மதமும் சாதியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஆயுதப்படைகளின் தன்னலமற்ற முயற்சிகளைப் பாராட்டிய நடிகர் அஜித் குமார், நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். “இன்று (நேற்று) நான் ஆயுதப்படைகளைச் சேர்ந்த பலரைச் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு நாம் தலைவணங்குகிறோம் என்பதை அவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நாம் நிம்மதியாக உறங்குவதற்காக அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். என் இதயம் அவர்களுக்காக துடிக்கிறது, மேலும் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். அவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்க மிகவும் அயராது உழைக்கிறார்கள், குறைந்தபட்சம் அவர்களின் மரியாதைக்காக, நம் நாட்டிற்குள், ஒருவருக்கொருவர் மதிக்கவும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் இந்தியாவில் நமக்குள் சண்டையிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்,” என்று அஜித் குமார் உருக்கமாகக் கூறினார்.

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நேற்று புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பெற்றுக்கொண்டார். ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் 19 பத்ம பூஷன் விருது பெற்றவர்களில் அவரும் ஒருவர். இந்த மதிப்புமிக்க விருதினைப் பெறுவதற்காக அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல மத்திய அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அஜித் குமாரின் இந்த சமூக அக்கறை மற்றும் தேசப்பற்று அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் மரியாதையை பெற்றுத் தந்துள்ளது.