உக்ரைனின் புதிய ஆயுதம்! டாங்கிகளை நொறுக்கும் ட்ரோன் படை!

கீவ்: உக்ரைன் இராணுவத்தின் புதிய பலமாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட “ஹ்ரோமைலோ ஆப்டிக்” (Hromylo Optic) ஆளில்லா வான்வழி அமைப்பை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு போர்ச் சூழல்களில் பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக எதிரி இலக்குகளை தாக்கிய இந்த ட்ரோன்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் தற்போது களமிறக்கப்படுகின்றன.

செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த ட்ரோனின் உற்பத்தியாளர் 10 அங்குல (24 சென்டிமீட்டர்) பெரிய சட்டகத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பதிப்பை உருவாக்கியுள்ளார். இந்த புதிய மேம்பாடு, கனரக வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறனை ட்ரோனுக்கு வழங்குகிறது. இதன் மூலம், பலத்த கவச வாகனங்களான டாங்கிகளையும் துவம்சம் செய்ய முடியும். அதிநவீன ஃபைபர்-ஆப்டிக் வழிகாட்டுதல் அமைப்பைப் பயன்படுத்துவதால், இந்த ட்ரோன்களை இலத்திரனியல் குறுக்கீடுகளால் எளிதில் பாதிக்க முடியாது. மேலும், பகல், குறைந்த ஒளி மற்றும் வெப்ப படம்பிடிப்பு முறைகளையும் இது ஆதரிக்கிறது. இதன் மூலம், எந்த நேரத்திலும் இலக்குகளை துல்லியமாக அடையாளம் காண முடியும். உக்ரைன் இராணுவப் பிரிவுகள் ஏற்கனவே இந்த ட்ரோன் அமைப்பை களத்தில் பயன்படுத்தி வருகின்றன. எதிரிகளின் டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கி நிலைகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

“எங்கள் உற்பத்தியாளர்கள் போர்க்களத்தின் சவால்களுக்கு விரைவாக பதிலளிக்கிறார்கள். புதுமையான தீர்வுகளை வேகமாக செயல்படுத்துபவர்களுக்கே வெற்றி,” என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சின் துணை அமைச்சர் வலேரி சுர்கின் தெரிவித்தார். “எதிரியின் தொழில்நுட்ப திறன்களை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் அவர்களை விட வேகமாக செயல்பட வேண்டும்,” என்றும் அவர் எச்சரித்தார். உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தவும், ரஷ்யாவின் இராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ளவும் உக்ரைன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா அமைப்புகளின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுமார் 40 ஃபைபர்-ஆப்டிக் வழிகாட்டுதல் கொண்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளை கீவ் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 15 ட்ரோன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சமீபத்தில் லேசர் கதிர்களை பாய்ச்சவும், ட்ரோன் கூட்டங்களைத் ஏவவும் திறன் கொண்ட ஆளில்லா தரை வாகனத்தையும் உக்ரைன் சோதனை செய்துள்ளது. 50 உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து 70க்கும் மேற்பட்ட தரை ட்ரோன்களை ஒரே நேரத்தில் பரிசோதித்து, மிகப்பெரிய ஆளில்லா தரை வாகன சோதனையையும் கீவ் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் இந்த துணிச்சலான நடவடிக்கைகள் ரஷ்ய படைகளுக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.