ஒட்லி பப் ரன் படுகொலை முயற்சி! பெண்களைத் தாக்கியவன் தற்கொலை!

ஒட்லி பப் ரன்னின்போது “படுகொலை” நடத்தப் போவதாக மிரட்டி இரண்டு பெண்களைத் தாக்கியவன், பின்னர் தனது தலையில் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. வூட் லேன் கோர்ட்டைச் சேர்ந்த 38 வயதான ஓவன் லாரன்ஸ், “பெண்ணின வெறுப்பாளர்” மற்றும் “வலதுசாரி” அனுதாபி என்று கூறப்படுகிறது. லீட்ஸில் வெறித்தனமாக தாக்கிய பின்னர், 19 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களை நோக்கி ஏர் ரைபிளால் சுட்டான். இதில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது சீராக உள்ளார். மற்றொரு பெண் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய லாரன்ஸ், சம்பவ இடத்தில் இருந்து சுமார் எட்டு நிமிட நடை தூரத்தில் உள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு பகுதியான பெக்கெட் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டான். அதிகாரிகள் அங்கு அவனது குறுக்கு வில் உட்பட பல்வேறு ஆயுதங்களையும் கண்டுபிடித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் அவனது இரண்டு முகநூல் கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் லீட்ஸ் வீதிகளில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அவனது திட்டங்கள் குறித்து அவன் பதிவிட்டுள்ளான். ஒரு புகைப்படத்தில், “இயற்கை தேர்வு” என்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து, பேஸ்பால் மட்டையுடன் போஸ் கொடுத்துள்ளான். தாக்குதலை அறிவிக்கும் அவனது பதிவில் “ஒட்லி ரன் படுகொலை” என்று குறிப்பிட்டு, அதை “வெறித்தனமான கொலை, படுகொலை, பயங்கரவாதம், பழிவாங்கல், பெண்ணின வெறுப்பு, கொலை/தற்கொலை” என்று வர்ணித்துள்ளான்.

“பிரெண்டன் டாரண்டின் 74 பக்க அறிக்கையான ‘தி கிரேட் ரீப்ளேஸ்மென்ட்’டைப் படிப்பதன் மூலம் நான் தீவிர வலதுசாரி கருத்துக்களையும் ஆராய்ந்துள்ளேன்,” என்று அவன் எழுதியுள்ளான். பிரெண்டன் டாரண்ட் ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை மேலாதிக்கவாதி. அவன் மார்ச் 15, 2019 அன்று இரண்டு மசூதிகளுக்குள் நுழைந்து நியூசிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான படுகொலையை நிகழ்த்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் லீட்ஸ் நகரில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.