தென்னிந்திய திரையுலகின் ‘ரவுடி’ ஸ்டார் விஜய் தேவரகொண்டா கார் விபத்தில் சிக்கியதாக வந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கதவால் மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி அருகே தேசிய நெடுஞ்சாலையில், அவர் பயணித்த சொகுசு கார் (லெக்ஸஸ்) விபத்தில் சிக்கியது. புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் நோக்கி அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற போலிரோ வாகனம் திடீரென வலதுபுறம் திரும்பியதால், விஜய் தேவரகொண்டாவின் கார் அதன் மீது லேசாக மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், காரின் முன்பகுதியில் (இடது பக்கத்தில்) லேசான சேதம் ஏற்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்தவுடன், விஜய் தேவரகொண்டா அங்கிருந்து வேறொரு வாகனத்தில் உடனடியாக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். காப்பீட்டு நோக்கங்களுக்காக அவரது குழுவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விபத்து குறித்த செய்தி வெளியானதும் பதற்றமடைந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், “எல்லாம் நல்லபடியாக உள்ளது. கார் தான் லேசாக மோதலைச் சந்தித்தது. நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். இப்போதுதான் வீட்டிற்கு வந்து வொர்க் அவுட்டும் செய்துவிட்டுத் திரும்பினேன். என் தலை லேசாக வலிக்கிறது, ஆனால் அதை ஒரு பிரியாணியும், நல்ல தூக்கமும் சரி செய்துவிடும். எனவே, என் அன்பானவர்களுக்கு, உங்களை யாரும் இந்தச் செய்தியால் கவலைப்படுத்த வேண்டாம். மிகப் பெரிய அணைப்புகள் மற்றும் என் அன்பு அனைவருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியால் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அவர் பத்திரமாக வீடு திரும்பியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.