கரூர்:
கரூர் நெரிசல் சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகும் நிலையில், த.வெ.க (TVK) தலைவர் விஜய் அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களோடு வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறி வருகிறார். இதன் காரணமாக, விஜய்யும் சரி, பாதிக்கப்பட்ட மக்களும் சரி, உணர்ச்சிப்பூர்வமாக (எமோஷனலாக) காணப்பட்டதாக எமது கரூர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகள்
இதுகுறித்து சங்கவி என்ற பெண்மணி கூறுகையில், “என் கணவர் ரமேஷ் கூட்டத்தில் உயிரிழந்தார். நேற்று மாலை விஜய் என்னிடம் வீடியோ காலில் பேசினார். ‘எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். நீதிமன்ற வழக்குகள் முடிந்த, அனுமதி கிடைத்த பிறகு நேரில் வருகிறேன்’ என்றார். எனக்கு விஜய் மீது வருத்தமில்லை. கூட்டம் வரும்போது அதிக பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதிக கூட்டம் வருவதற்கு விஜய் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சுமதி என்ற பெண்மணி கூறுகையில், “விஜய் என்னிடம் ‘அம்மா… பாப்பாவையும், பையனையும் பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் எங்களுக்குப் போன் செய்யுங்கள்’ என்று தொடர்பு எண் கொடுத்தார். ‘விரைவில் நேரில் வருகிறேன்’ எனக் கூறி ஆறுதல் சொன்னார்” என்றார்.
மற்றொருவர் குறிப்பிடுகையில், “நேற்று விஜய் அவர்கள் எனக்கு இரவு 11 மணிக்குக் கால் செய்திருந்தார். த.வெ.க.வில் இருந்து 9 பேர் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் மாநிலப் பொறுப்பில் இருப்பதாகக் கூறினார்கள். துக்கம் பற்றி விசாரித்துவிட்டு, ‘தளபதி பேசுவார்’ என விஜய்யிடம் வீடியோ கால் செய்து கொடுத்தனர். விஜய், ‘நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. நிச்சயமாக நான் உங்களுக்கு இருக்கிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்’ என்றார்.”
கரூர் செல்ல விஜய் தீவிரம்
சட்டச் சிக்கல்கள் இருக்கும் வேளையில் விஜய் அவர்கள் கரூர் செல்வதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் களத்தில் இறங்க உள்ளார் என்ற தகவல் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது.
இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள் கரூர் செல்ல அனுமதி கேட்டு காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய் அவர்கள் கரூர் சென்று மக்களைச் சந்திப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. தொண்டர் பாதுகாப்புப் படையினர் அவர்களே விஜய்க்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.