அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல ராப் இசைக்குழுவான ‘Kneecap’-ன் பாடகர் லியாம் ஓ’ஹன்னா (Liam O’Hanna), பிரிட்டிஷ் அரசால் சுமத்தப்பட்ட ‘பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து’ தப்பித்த நிலையில், அவரை மீண்டும் இழுக்க UK அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது!
கடந்த ஆண்டு நவம்பரில் லண்டனில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில், லியாம் ஓ’ஹன்னா தடை செய்யப்பட்ட லெபனான் அமைப்பான ‘ஹிஸ்புல்லா’-வின் கொடியை ஏந்தியதாக அவர் மீது ‘பயங்கரவாத சட்டம்’ (Terrorism Act) பாய்ந்தது.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்குப் பதிவு செய்வதில் சட்ட ரீதியான கால வரம்பை (Statutory Limit) UK அரசுத் தரப்பு மீறியதாகக் கூறி, தலைமை மாஜிஸ்திரேட் பால் கோல்ட்ஸ்பிரிங் (Paul Goldspring) வழக்கை ‘சட்டவிரோதமானது’ என்று அறிவித்து, தள்ளுபடி செய்தார்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லியாம் ஓ’ஹன்னா (Mo Chara) நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம், “இந்த வழக்கு ஒருபோதும் என்னைப் பற்றியது அல்ல. இது காசாவைப் பற்றியது. அநீதிக்கு எதிராகப் பேசத் துணிந்தால் என்ன ஆகும் என்பதைப் பற்றியது,” என்று கூறி பிரிட்டிஷ் அரசைக் கடுமையாகச் சாடினார்.
இந்நிலையில், வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்க பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் (CPS) அதிரடியாக மேல்முறையீடு செய்துள்ளது.
“சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒரு முக்கியமான புள்ளி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று CPS செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் பாலஸ்தீனிய ஆதரவுப் போராட்டங்களின் மத்தியில், ஒரு ராப் பாடகரை பயங்கரவாதியாகச் சித்தரிக்க UK அரசு ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்ற கேள்வியை இந்த மேல்முறையீடு எழுப்பியுள்ளது!
Kneecap இசைக்குழுவின் பதில் என்னவாக இருக்கும்? மீண்டும் நீதிமன்றத்தை அதிர வைக்கப் போகிறது காசா விவகாரம்!