கோலிவுட்டின் பரபரப்புச் செய்திகளில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சிக்கியுள்ளது ஒரு புதிய திருப்பம். விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ஆதிரிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள நடிகர் அஜித்தின் 64வது படமான AK64-ஐ தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
AK64 படத்தின் பட்ஜெட் சுமார் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவுக்குப் பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் அனுபவம் ராகுலுக்கு இல்லை என்றாலும், நடிகர் அஜித் கொடுத்த நம்பிக்கையின் பேரிலேயே அவர் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் சம்பளத்திற்குப் பதிலாக, ஓடிடி (OTT) மற்றும் சேட்டிலைட் உரிமைகளை அஜித் எடுத்துக்கொள்வதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. நடிகர் அஜித்துக்கு நீண்டகாலமாக ஒரு பாலிசி உள்ளது: “தன்னுடைய படம் முழுமையாக முடியும் வரை, தயாரிப்பு நிறுவனம் வேறு எந்தப் படத்தையும் தயாரிக்கவோ, பெரிய அளவில் வெளியீட்டு உரிமைகளை வாங்கவோ கூடாது.” இந்தப் பழக்கத்தை அஜித் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறார்.
இந்த அஜித்தின் ‘பாலிசி’யால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பல பெரிய வாய்ப்புகளை இழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘LIK’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ராகுல் நிறுவனம் வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், AK64 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருப்பதால், இது அஜித்துக்குப் பிடிக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில், அந்தப் படத்தை வேண்டாம் என்று ராகுலே தவிர்த்துவிட்டாராம்.
இதைவிடப் பெரிய அதிர்ச்சி, நடிகர் விஜய்யின் புதிய படமான ‘ஜனநாயகன்’ (தற்காலிகப் பெயர்) படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ராகுல் வாங்க இருந்தார். ஆனால், கண்டிப்பாக இது அஜித்துக்குப் பிடிக்காது என்பதால், அந்த மெகா படமும் ராகுலின் கையை விட்டுப் போகும் வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவுகிறது.
அதேசமயம், ராகுல் தரப்பில் உள்ள ஒரு நெருக்கடி காரணமாகவும் இந்த வெளியீட்டு உரிமை கைவிட்டுப் போக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. அதாவது, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனத்துடன் நெருக்கமாக இருப்பதால், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று நடிகர் விஜய்யிடம் சில தரப்பினர் கூறியுள்ளதாகவும் ஒரு செய்தி காட்டுத் தீயாகப் பரவுகிறது.
ஒருபக்கம் அஜித்தின் பாலிசியும், மறுபக்கம் கோலிவுட் அரசியல் அழுத்தங்களும் தயாரிப்பாளர் ராகுலைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன!