தெற்கு லெபனான் நகரமான சைடனில் இஸ்ரேல் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனானின் அரசு செய்தி நிறுவனமான தேசிய செய்தி நிறுவனம் இந்த அதிகாலை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அந்த தளபதியை கலீத் அகமது அல்-அஹமது என்று அடையாளம் காட்டியுள்ளது. அவர் தொழுகைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. “எங்கள் வீரத்தியாகிக்கு நாங்கள் துக்கம் அனுசரிக்கையில், எல்லாம் வல்ல இறைவனுக்கும், எங்கள் மக்களுக்கும், எங்கள் தேசத்துக்கும் தொடர்ந்து எதிர்ப்பின் பாதையில் செல்வோம் என்று உறுதியளிக்கிறோம்,” என்று ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூளுரைத்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் அகமது கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவர் “லெபனானில் ஹமாஸின் மேற்குப் பிரிவின் செயல்பாட்டுத் தலைவர்” என்றும் தெரிவித்துள்ளது. அவர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், இஸ்ரேலுக்கு எதிராக “பல” தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முயன்றது. ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹிஸ்புல்லா தனது போராளிகளை லெபனானின் லிட்டானி ஆற்றுக்கு வடக்கே, இஸ்ரேல் எல்லையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு பின்வாங்கவும், தெற்கே எஞ்சியிருக்கும் எந்த இராணுவ உள்கட்டமைப்பையும் அகற்றவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இஸ்ரேல் தனது அனைத்து படைகளையும் லெபனானில் இருந்து திரும்பப் பெற வேண்டும். ஆனால் அது “மூலோபாய முக்கியத்துவம்” வாய்ந்ததாக கருதும் ஐந்து இடங்களில் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா லிட்டானி ஆற்றுக்கு தெற்கே இருந்து போராளிகளை திரும்பப் பெற்றுள்ளதாகவும், அப்பகுதியில் பெரும்பாலான இராணுவ உள்கட்டமைப்பை அகற்றியுள்ளதாகவும் லெபனான் பாதுகாப்பு வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. லெபனான் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளதாகவும், இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தவும், ஐந்து எல்லை நிலைகளில் இருந்து படைகளை திரும்பப் பெறவும் சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம், லெபனானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான உயர் பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த நாட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கு ராக்கெட்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட பல பாலஸ்தீனியர்களை ஹமாஸ் சமீபத்தில் லெபனான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.