நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடன் இணைவார் என்ற குழப்பங்கள் பல மாதங்களாக நீடித்து வந்த நிலையில், தற்போது அதன் இறுதிக்கட்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன.
‘அமரன்’ படத்திற்குப் பிறகு, வெங்கட் பிரபு மற்றும் ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகிய இருவரில் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இடையில், சிவகார்த்திகேயனுக்கும் சிபி சக்கரவர்த்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரை சிவகார்த்திகேயன் நாடியதாகவும் தகவல் வந்தது.
ஆனால், அந்தப் படத்துக்குப் பண உதவி (Finance) செய்ய ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர், சிபி சக்கரவர்த்தி இயக்கினால் மட்டுமே முதலீடு செய்வேன் என்று கறாராகக் கூறிவிட்டதால், மீண்டும் சிபி சக்கரவர்த்தியே இந்தப் படத்தின் இயக்குநராகத் தேர்வாகியுள்ளார்!
இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ராஷ்மிகாவின் தேதிகளுக்காகப் படத்தின் வேலைகள் பல மாதங்கள் வரை தள்ளிவைக்கப்பட்டன.
ஆனால், சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால், இந்தப் படத்துக்குத் தொடர்ந்து தேதிகள் ஒதுக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை காலம் காத்திருந்தும், ராஷ்மிகாவைக் காண முடியாது என்பதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராஷ்மிகாவின் விலகலுக்குப் பிறகு, தற்போது ஆந்திராவைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்ரீலீலாவை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், சிபி சக்கரவர்த்தி – சிவகார்த்திகேயன் கூட்டணியின் புதிய பட வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன.