சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான படங்களை சிலர் AI (artificial intelligence) தயாரித்து வெளியிட்டு. இந்தப் படுகொலைக்கு மத்தியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமான ஒரு விடையம். ஆனால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், தமது படங்களை நிறைய மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்வதும், உதனூடாக பணத்தை சம்பாதிப்பதுமே இவர்கள் தொழிலாக உள்ளது.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட இந்த எலும்புத் தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருப்பதால், நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதால், சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து, தெளிவான முறையில் சரியாக அகழ்ந்து எடுப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, நேற்று புதியதாக எந்த எலும்புத் தொகுதிகளும் அடையாளப்படுத்தப்படவில்லை.
சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கையான அல்லது போலியான படங்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால், குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும், நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா உறுதியாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், படங்களையும் பரப்புவதைத் தவிர்த்து, உத்தியோகபூர்வ தகவல்களுக்காகக் காத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.