ஆட்டமல்ல, சூதாட்டமா? சதுரங்கத்துக்கு தாலிபான் தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் சதுரங்க விளையாட்டு சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, அடுத்த அறிவிப்பு வரும் வரை அதற்கு தடை விதித்துள்ளது.

இஸ்லாமிய சட்டத்துடன் இந்த விளையாட்டு இணக்கமாக உள்ளதா என்பதை தீர்மானிக்கும் வரை, காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலிபானால் தடை செய்யப்படும் சமீபத்திய விளையாட்டு சதுரங்கம் ஆகும். பெண்கள் எந்த விளையாட்டிலும் பங்கேற்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளனர்.

2021 ஆகஸ்டில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து, தலிபான் தனது கடுமையான இஸ்லாமிய சட்டக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் சட்டங்களையும் விதிமுறைகளையும் படிப்படியாக விதித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, தலிபான் அரசாங்கத்தின் விளையாட்டு இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் சதுரங்கம் “சூதாட்டத்திற்கான ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது”.

“சதுரங்க விளையாட்டு தொடர்பாக மதரீதியான கருத்துக்கள் உள்ளன,” என்று அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“இந்த கருத்துக்கள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.”

சமீபத்திய ஆண்டுகளில் முறைசாரா சதுரங்க போட்டிகளை நடத்திய காபூலில் உள்ள ஒரு கஃபே உரிமையாளர், இந்த முடிவை மதிப்பதாகவும் ஆனால் இது தனது வணிகத்தை பாதிக்கும் என்றும் கூறினார்.

“இளைஞர்களுக்கு இந்த நாட்களில் அதிக செயல்பாடுகள் இல்லை, அதனால் பலர் தினமும் இங்கு வந்தார்கள்,” என்று அஸிஸுல்லா குல்சாதா கூறினார். “அவர்கள் ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு தங்கள் நண்பர்களுக்கு சதுரங்க விளையாட்டில் சவால் விடுவார்கள்.”

சதுரங்கம் மற்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் விளையாடப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, அதிகாரிகள் கலப்பு தற்காப்பு கலைகள் (MMA) போன்ற கட்டற்ற சண்டைகளை தொழில்முறை போட்டிகளில் தடை செய்தனர், இது மிகவும் “வன்முறையானது” மற்றும் “ஷரியா தொடர்பாக சிக்கலானது” என்று கூறினர்.

“இந்த விளையாட்டு ஷரியா தொடர்பாக சிக்கலானது என்றும், இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணான பல அம்சங்கள் இதில் உள்ளன என்றும் கண்டறியப்பட்டது,” என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் கடந்த ஆகஸ்டில் கூறினார்.

“முகத்தில் குத்துவதை” தடை செய்யும் சட்டத்தை தலிபான் 2021 இல் அறிமுகப்படுத்தியபோது எம்எம்ஏ போட்டிகள் நடைமுறையில் சட்டவிரோதமாக்கப்பட்டன.