இனப்படுகொலை குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்கும் இலங்கை -கனடாவுடன் மோதல் !

 

கொழும்பு: இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ எந்தவொரு நம்பகமான அமைப்பாலும் உறுதிப்படுத்தப்படாதவை என்றும், தவறான தகவல்களின் அடிப்படையிலானவை என்றும் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை (மே 14) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சு, இந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை உறுதியாக நிராகரிப்பதாகவும், இது முக்கியமாக கனடாவிற்குள் தேர்தல் இலாபங்களுக்காகப் பரப்பப்படுவதாக நம்புவதாகவும் வலியுறுத்தியுள்ளது.

“2021 ஏப்ரலில், கனடாவின் வெளிவிவகார, வர்த்தக மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், கனடா அரசாங்கம் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததாக எந்தக் கண்டுபிடிப்பையும் மேற்கொள்ளவில்லை என்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, கனடா லிபரேஷன் டைகர்ஸ் ஒஃப் தமிழ் ஈழம் (விடுதலைப் புலிகள்) அமைப்பை 2006 இல் ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டதுடன், 2024 ஜூன் மாதத்திலும் இந்த வரையறையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கனடாவின் பிராம்ப்டன் நகரிலுள்ள சிங்குகௌசி பூங்காவில் (Chinguacousy Park, Brampton) தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் எனக் கூறப்படும் ஒன்றின் நிர்மாணத்துக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் தமது வலுவான ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளது. பிராம்ப்டன் நகர சபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியைத் தடுத்து நிறுத்த கனடா மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

“இந்த நகர்வை பரந்த இலங்கை மற்றும் கனடிய சமூகங்களுக்குப் புண்படுத்தும் செயலாக இலங்கை கருதுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கற்பனைகளின் அடிப்படையில் நினைவுச் சின்னங்களை அமைப்பதும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களிடையேயான நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நிரந்தர அமைதிக்கான இலங்கையின் உண்மையான முயற்சிகளுக்குத் தடையாகவும் உள்ளது என்று இலங்கை உறுதியாக நம்புகிறது” என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சர் விஜயதா ஹேரத் (Vijitha Herath), ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைச்சின்னம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் வலுவான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்துவதற்காக இன்று கனடிய உயர்ஸ்தானிகரை (Canadian High Commissioner) சந்தித்ததாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை நோக்கிய முயற்சுகளைச் சிக்கலாக்குவதாகவும், undermine செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.