ஆப்பிளின் ‘சீனா வெளியேற்றம்’ ஆரம்பம்! Foxconn’s ரூ. 3,706 கோடி மெகா சிப் ஆலை இந்தியாவில்

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய மின்னணு ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn), இந்திய டெக்னாலஜி நிறுவனமான ஹெச்.சி.எல் குழுமத்துடன் (HCL Group) இணைந்து இந்தியாவில் குறைக்கடத்தி (Semiconductor) ஆலை ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது! சுமார் 37.06 பில்லியன் இந்திய ரூபாய் (433 மில்லியன் அமெரிக்க டொலர்) முதலீட்டில் அமையவுள்ள இந்த மெகா திட்டம், ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்கள் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையின் ஒரு முக்கிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், ஐபோன் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபாக்ஸ்கான் போன்ற ஆப்பிள் சப்ளையர்கள் தங்கள் உற்பத்தித் தளங்களைச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில், ஃபாக்ஸ்கானின் இந்த மிகப் பெரிய முதலீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அமையவுள்ள இந்த ஆலை, 2027 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.

இந்த ஆலையில், மொபைல் போன்கள், லேப்டாப்கள், வாகனங்கள், தனிநபர் கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் ‘டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள்’ (Display Driver Chips) தயாரிக்கப்படும். மாதம் ஒன்றுக்கு 20,000 வேஃபர்கள் (Wafers) மற்றும் 36 மில்லியன் டிஸ்ப்ளே டிரைவர் சிப்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வேஃபர்கள் என்பது சிப்களுக்கு அடிப்படையாக அமையும் மெல்லிய குறைக்கடத்திப் பொருள் துண்டுகளாகும்.

இந்தியா, குறைக்கடத்தி உற்பத்தியில் ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஃபாக்ஸ்கானின் இந்த மிகப் பெரிய முதலீடு, இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக மின்னணு உற்பத்திப் பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாகவும், இந்தியா சீனாவுக்கு ஒரு வலுவான மாற்றீடாக உயர்ந்து வருவதற்கான அறிகுறியாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.