ஒடிங்கா நினைவேந்தல்… கண்ணீருடன் கலவரம்: திணறிய பாதுகாப்புப் படையினர்!

ஒடிங்கா நினைவேந்தல்… கண்ணீருடன் கலவரம்:  திணறிய பாதுகாப்புப் படையினர்!

கென்யாவின் முன்னாள் பிரதமர் மற்றும் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் (Raila Odinga) நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏற்பட்ட கோரமான சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.

தலைநகர் நைரோபியில் நடந்த முதல்நாள் நிகழ்வுகளில் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் என பெரும் கலவரம் வெடித்த நிலையில், அவரது ஆதரவாளர்களின் கோட்டையான மேற்கு கென்யாவில் உள்ள கிசுமு (Kisumu) நகரில் நடைபெற்ற நினைவேந்தலில் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்!

நடந்தது என்ன?

  • தங்கள் ‘தந்தை’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒடிங்காவின் உடலை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற துயரத்திலும் உணர்ச்சிப் பெருக்கிலும் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், கிசுமு நகரில் உள்ள ஜோமோ கென்யாட்டா மைதானத்தில் திரண்டனர்.
  • ஒடிங்காவின் சடலப் பெட்டியைப் பார்க்க அனுமதிக்கப்பட்டபோது, கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட்டது. மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முண்டியடித்ததில், பலர் தரையில் விழுந்து நசுக்கப்பட்டனர்.
  • செஞ்சிலுவைச் சங்க அதிகாரி (Red Cross Official) ஒருவர், இந்தச் சம்பவத்தில் டஜன் கணக்கானோர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் துயரங்களின் பட்டியல்:

  • ஒடிங்காவின் உடல் நைரோபிக்கு வந்தபோது விமான நிலையத்தில் பெருங்கூட்டம் திரண்டதில் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
  • நைரோபியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடந்த அரசு இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Doctors Without Borders) உதவிக்குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
  • அதற்கு முந்தைய நாள் (வியாழக்கிழமை), ஒடிங்காவின் உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த மைதானத்தில், கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியது.

அமைதிக்கு அழைப்பு விடுத்த குடும்பம்:

தொடர்ச்சியான இந்தத் துயரச் சம்பவங்கள் காரணமாக, ஒடிங்காவின் உடல் கிசுமுவில் இருந்து அவரது பூர்வீக இல்லமான போண்டோவுக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading