ஈரானின் ‘காணாமல் போன’ 880 பவுண்டு யுரேனியம் எங்கே? – டிரம்ப் தாக்குதலுக்கு முன் அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமானதை அயதுல்லா நகர்த்தியிருக்கலாம் என சந்தேகம்!
வாஷிங்டன் / டெஹ்ரான்: அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு முன்னதாக ஈரான் தனது சுமார் 880 பவுண்டுகள் (சுமார் 400 கிலோகிராம்) அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமான யுரேனியத்தை நகர்த்தியுள்ளது. இந்த யுரேனியம் தற்போது எங்குள்ளது என்பது குறித்துத் தங்களுக்குத் தெரியவில்லை என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ‘காணாமல் போன’ யுரேனியம் உலக அரங்கில் பெரும் கவலையை எழுப்பியுள்ளது.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-இன் கருத்து:
“வரும் வாரங்களில் அந்த எரிபொருள் குறித்து நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவோம், அது தொடர்பாக ஈரானியர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள விஷயங்களில் இதுவும் ஒன்று” என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஞாயிற்றுக்கிழமை ABC இன் ‘திஸ் வீக்’ நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
ஆயதுல்லா கமேனியின் கூற்று:
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாகவே, நாட்டின் யுரேனியம் இருப்பை ஒரு ரகசிய இடத்திற்கு மாற்றியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய அதிகாரிகளின் சந்தேகம்:
இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறுகையில், டிரம்ப்-ன் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைப் போர் அச்சுறுத்தல்களை உணர்ந்த ஈரான், முன்னெச்சரிக்கையாக 880 பவுண்டுகள் யுரேனியத்தை அகற்றியுள்ளது. இது கிட்டத்தட்ட 10 அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தல்:
கொலராடோவை தலைமையிடமாகக் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரரான மேக்சார் டெக்னாலஜிஸ் (Maxar Technologies), சனிக்கிழமை இரவு குண்டுகள் வீசப்படுவதற்கு முன் ஃபோர்டோ அணுசக்தி தளத்திலிருந்து 16 லாரிகள் வெளியேறும் காட்சிகளை வெளியிட்டது. இந்த லாரிகள் ஏதேனும் பொருள்களைக் கொண்டு சென்றிருக்கலாம் என்று அந்த காட்சிகளில் தெரிகிறது.
‘யுரேனியத்தை குகைகளில், சுரங்கங்களில் மறைக்க முடியும்’:
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் (Naftali Bennett) ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், “ஈரான் அதை (யுரேனியத்தை) எல்லா வகையான ரகசிய இடங்களிலும் மறைக்க முடிந்த அனைத்தையும் செய்தது என்று நாம் ஊகிக்க வேண்டும். யுரேனியம் என்பது மிகவும் அடர்த்தியான பொருள், எனவே அதை குகைகள், சுரங்கங்கள் போன்றவற்றில் மறைக்க முடியும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ‘காணாமல் போன’ யுரேனியம் உலக பாதுகாப்புக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது பிராந்தியத்தில் பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.