இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாபெரும் வெற்றிப் படமாக மாறிய படம், மத கஜ ராஜா. இந்த படம் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. படம் திரையிடப்பட்ட இடங்கள் மட்டும் இல்லாமல், நாளுக்கு நாள் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. படம் இதுவரை ரூபாய் 30 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படியான நிலையில் படத்தின் வெற்றி விழா அதாவது ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஷால் பேசும்போது பல முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு சார்பில் நடத்தப்பட்ட பிரஸ் மீட்டில், விஷால் கலந்து கொண்டார். அப்போது அவரது கைகள் மிகவும் நடுங்கியது. இவை அனைத்திற்கும் விஷால் பதில் அளிக்கும் வகையில் பேசினார்.
அவர் பேசும்போது, ” ஆர்யா போன்ற நண்பன் எனக்கு கிடைக்க நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. எனக்கு கண்ணீர்தான் வருகின்றது. நான் ஏதோ ஒரு புண்ணியம் செய்துள்ளேன். வரலஷ்மியை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. அதேபோல் இத்தனை ஆண்டுகள் நட்பில் வரலஷ்மியைப் பார்த்து நான் கண்ணீர் விட்டது என்றால், அது அனுமன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் சண்டையைப் பார்த்துதான்.
எனது உடல் நடுக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தது. நான் போதைக்கு அடிமையாகிவிட்டேன், நரம்புத் தளர்ச்சி என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் இதன் மூலம் என்மீது எவ்வளவு அன்பு உள்ளது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு அன்பினை நான் சம்பாதித்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கு, நம்பிக்கை கொடுத்துள்ளது. ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளோம்” என பேசினார்.