என்ன என்று சொல்லவே முடியவில்லை… இந்த 2K கிட்ஸ் என்ன அப்படி மூளை இல்லாதவர்களா என்று தான் கேட்கத் தோன்றும். இந்த இளைஞர் முதலில் 15 வயதே ஆன மாணவி ஒருவரைக் காதலிக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார். உடனே மற்றுமொரு 18 வயது மாணவியைக் காதலித்துள்ளார். தற்போது இருவருமே கர்பம். இதனால் 15 வயது மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டில், இந்த இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விரிவாகப் பார்கலாம்:
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து பதிவான ஒரு சம்பவம், சிறுவர் சிறுமியரிடையே பாலியல் கல்வி மற்றும் போக்சோ சட்டம் குறித்த புரிதல் எவ்வளவு அவசியம் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. காதல் மோகத்தில் எல்லை மீறிய ஒரு இளைஞர், தனது எதிர்காலத்தை மட்டுமல்லாமல், வெவ்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களின் வாழ்வையும் ஒரே நேரத்தில் சூனியமாக்கியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 22 வயதான பிரவீன், டிப்ளமோ முடித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இரட்டைப் பழக்கம்: பிரவீன் ஒருபக்கம், ஊட்டியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் கடந்த சில மாதங்களாகக் காதலில் இருந்தார். இவர்களுக்கு இடையே தற்காலிகப் பிரிவு ஏற்பட்டபோது, அதே ஊரில் உள்ள கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியுடனும் பழக ஆரம்பித்தார்.
அத்துமீறல்: மீண்டும் பள்ளிச் சிறுமியுடன் சமரசம் செய்த பிரவீன், ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவளைப் பிரிந்துவிட்டு மீண்டும் கல்லூரி மாணவியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். முதல் குழந்தை: கல்லூரி மாணவி கர்ப்பமானதால், 18 வயது பூர்த்தியடைந்த அவரை பிரவீன் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மருத்துவமனையில் வெடித்த போக்சோ வழக்கு
இதற்கிடையே, கடந்த 3-ம் தேதி பள்ளிச் சிறுமிக்கு எதிர்பாராத விதமாக வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியின் தாய் அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 22 வயது பிரவீன் தான் 15 வயதுப் பள்ளிச் சிறுமியை கர்ப்பமாக்கியது உறுதியானது. இதனடிப்படையில், சிறுமியின் மீது பாலியல் அத்துமீறல் செய்த குற்றத்திற்காகப் பிரவீன் மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (POCSO Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.