உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவில் இருந்து ரஷ்யா பகுதிக்கு அனுப்பப்பட்டவர்களில், சுமார் 300 பேர் உயிரிழந்ததாகவும், 2,700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் போரில் தாக்குப்பிடித்து வருகிறது. ரஷ்யாவிற்கு வட கொரிய ராணுவம் படைகளை அனுப்பி உதவி வருகிறது.
வட கொரியாவில் இருந்து ரஷ்யா பகுதிக்கு அனுப்பப்பட்டவர்களில், சுமார் 300 பேர் உயிரிழந்தும், 2,700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர் என தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS) திங்களன்று நாடாளுமன்றத்திற்கு வழங்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வடகொரிய ராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் இதை மிகுந்த வருத்தத்துடன் விமர்சித்துள்ளனர். முன்னாள் ராணுவ அதிகாரி லீ சியோல்-யூன், “இந்த போரில் வீரர்கள் அறியாமையுடன் உயிரிழக்க வேண்டியுள்ளது வருத்தமாக உள்ளது” என்று கூறினார்.
37 வயதான லீ செஒல்-யுன், 2016 ஆம் ஆண்டில் தப்பிச் செல்வதற்கு முன் வட கொரியா மக்கள் இராணுவத்தின் பாதுகாப்பு துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
மற்றொரு தப்பியோடி ஜாங் சேயூல், “இந்த வீரர்கள் சிறந்த பயிற்சியுடன் இருந்தாலும், உயிரிழக்க வேண்டிய சூழல் வருவது நெஞ்சை உடைக்கிறது” என கூறினார். மேலும் வடகொரிய வீரர்களை அனுப்பப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.