Jallikattu: ஜல்லிகட்டில் வீரர்களை மிரட்டிய நடிகர் சூரியின் காளை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் யாரையும் நெருங்க விடாமல் கெத்து காட்டிய நடிகர் சூரியின் காளை வெற்றிப்பெற்றது.  உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது மகனுடன் பங்கேற்றார். 

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதில் இருந்து ஒவ்வொருத்தரின் காளைகளும் வாடிவாசலில் சீறி பாய்ந்து மாடுபிடி வீரர்களையும், பார்வையாளர்களையும் மிரட்டியது. அந்த வகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரியின் காளையும் களமிறங்கியது. 

ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்கள் சூழ்ந்திருக்க வாடிவாசலில் சீறியபடி வந்த காளை வீரர்களை தன் அருகே நெருங்க விடாமல்,  அனைவரையும் மிரளச் செய்து ஓடியது. சிறுத்தை போல் ஓடி வந்த சூரியின் காளையை பார்த்த வீரர்கள் நெருங்காமல் ஒதுங்கி நிற்க, காளை வெற்றிப்பெற்றது.

 சூரியின் காளை பிடிக்கொடுக்காமல் ஓடியதால் போட்டியில் வெற்றிப்பெற்று சைக்கிளை பரிசாக வென்றது. சூரியின் காளை என்று விழா குழுவினர் அறிவித்த போது அதை கேட்ட, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அருகில் இருந்த அமைச்சரிடம் “சூரி வரவில்லையா, அவர் எங்கே” என்று கேட்டார். சூரியின் காளை களமாடி வென்றதை உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைவரும் பார்த்து ரசித்தனர்.