ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மோடி இணைந்து குண்டு துளைக்காத காரில் பல இடங்களுக்குச் சென்றுள்ளார்கள். பெரும்பாலும் காரில் செல்லும் வேளைகளில் தான் பல ஒப்பந்தங்கள் தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டதாக டெகல்கா இணையம் தெரிவித்துள்ளது. வாருங்கள் விரிவாகப் பார்கலாம் !
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், உலகளாவிய அரசியல் சூழல் கணிசமாக மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கோவிட் பெருந்தொற்று காரணமாக ஐந்து மணி நேரம் மட்டுமே நீடித்திருந்த அவரது முந்தைய விஜயத்தின்போது, பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விவாதித்திருந்தார். ஆனால் அதன் பின்னர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பு, அவரை உலகளவில் தனிமைப்படுத்தியதுடன், சர்வதேச பயணங்களையும் கட்டுப்படுத்தியது. இந்தச் சவாலான காலகட்டத்திற்கு மத்தியிலேயே, இரு நாடுகளுக்கும் இடையிலான 23வது வருடாந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புடின் டெல்லி வந்துள்ளார்.
இவ்வாறான ஒரு கொந்தளிப்பான புவிசார் அரசியல் பின்னணியில், புடினின் இப்போதைய விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் மீள்வருகை, பல ஆண்டுகளாக பேணப்பட்ட அமெரிக்க-இந்திய உறவுகளை சீர்குலைத்ததுடன், இந்தியாவின் இறக்குமதிகள் மீது அதிக சுங்கவரிகளையும் விதித்தது. இதன் மத்தியில், ரஷ்யாவுடனான நிரந்தர உறவின் சின்னமாக புடினின் விஜயம் பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்க அழுத்தங்களுக்கு இரு நாடுகளும் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியையும் உலகிற்கு எடுத்துச் செல்கிறது. இந்த உச்சி மாநாடானது, ரஷ்யா மீண்டும் “சாதாரண சர்வதேச உறவுகளுக்கு” திரும்பும் ஒரு சமிக்ஞையாகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், இந்தியாவுக்கு இது மிகவும் இக்கட்டான காலப்பகுதியாகும். ஹட்சன் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் இயக்குநர் அபர்ணா பாண்டே குறிப்பிட்டது போல, ‘தனிமைப்படும் அமெரிக்கா, பலவீனமான ரஷ்யா மற்றும் மிக வலிமையான சீனா’ ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை கையாள வேண்டியுள்ளது. இந்நிலையில், புடின் வருவதற்கு முன்னர், பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் இணைந்து ‘ரஷ்யா சமாதானத்தில் அக்கறை காட்டவில்லை’ என்ற தலைப்பில் இந்தியப் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரை சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை, ‘மூன்றாம் நாட்டுடனான இந்தியாவின் உறவில் வெளிப்படையாக ஆலோசனை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறை’ என கடுமையாக சாடியது.
பனிப்போர் காலத்திலிருந்தே ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு ஆழமாக உள்ளதுடன், ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு விநியோகஸ்தராகவும் தொடர்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, உக்ரைன் போருக்குப் பின்னரும், இந்தியா மலிவு விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கண்டுகொள்ளாமல் இருந்தன. ஆனால், ட்ரம்ப்பின் நிர்வாகம் இந்திய இறக்குமதிகள் மீது தண்டனைக்குரிய மேலதிக 25% சுங்கவரியை விதித்து, ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துமாறு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்தது. வெளியுறவுக் கொள்கையில் பன்முக-இணைவை கடைப்பிடிக்கும் இந்தியா, வெளியாரின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கிறது. ட்ரம்ப்பின் இந்த நிர்ப்பந்தத்தை உறவுகளில் ஏற்பட்ட மிக மோசமான சரிவாகவே இந்தியா கருதுகிறது.