நெகிழ்ந்து போய்.. விக்கித்து நின்ற மக்கள்.. கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க.. திரண்ட ஜெயில் கைதிகள்

 

கலிபோர்னியா: தெற்கு கலிபோர்னியா முழுவதும் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 1,000 சிறை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பல்வேறு சிறைகளில அடைக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் தீ அணைக்கும் பணியில் முன்னணியில் உள்ளனர். .

வழக்கமாக இந்த காட்டுத் தீ முதலில் வென்சுரா என்ற பகுதியில் உருவாகும். பின் சாண்டா பார்ப்பாரா பகுதியில் உக்கிரம் அடைந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை கூட பரவும். இந்த முறை லாஸ் ஏஞ்சல்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 3,00,000 பேர் கலிபோர்னியா விட்டு வெளியேறிவிட்டனர். 10,000க்கும் அதிகமான வீடுகள் அப்படியே தீக்கு இரையாகி இருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட பெரிய காட்டுத் தீயில் இதுவும் ஒன்று.

கலிபோர்னியா திருத்தங்கள் மற்றும் மறுவாழ்வுத் துறை (CDCR) தலைமையிலான நீண்டகால தன்னார்வத் திட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் தீயணைப்பு படையுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அங்கே ஏற்பட்டு உள்ள தீ காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் 37,000 ஏக்கர் எரிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான அவசரகால பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 1,000 சிறை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 சிறையில் அடைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள், சிறையில் உள்ள வலுவான உடல் அமைப்பு கொண்டவர்கள், தன்னார்வலர்கள், மாநிலத்தால் நடத்தப்படும் 35 பாதுகாப்பு தீயணைப்பு முகாம்களில் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 200க்கும் அதிகமான பெண்களும் இணைந்துள்ளனர்.

பயன்பாட்டில் உள்ள 900-க்கும் மேற்பட்ட சிறைகளில் கிட்டத்தட்ட 1,870 கைதிகள் இதற்காக சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் தண்டனை காலம் இதனால் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மோசமான சேதம்: இந்த முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லாஸ் 

ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ கைப்பற்றிவிட்டது. 2,95,000 ஏக்கர் நிலப்பரப்பை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த தீ மொத்தமாக ஆக்கிரமித்த பகுதிகள் லண்டனின் அளவை விட அதிகமாகி விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இந்த தீ காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர். 

இதனால் ஏற்பட்ட புகை நியூயார்க் நகரத்தில் கூட பரவி உள்ளது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி உள்ளது. எவ்வளவு இழப்பு என்று தீ அணைந்த பின்பே கண்டுபிடிக்க முடியும். 4700 கோடிக்கும் அதிகமாக கண்டிப்பாக இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அங்கே தீயை அணைக்க போதுமான ஊழியர்கள் இல்லை என்பதால் ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அங்கே தீயை அணைப்பதில் அதிபர் பிடன் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.