பியாங்யாங்: வடகொரியாவில் பல வினோதமான சட்டங்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. சிறிய குற்றங்களுக்கு கூட மிகப்பெரிய தண்டனைகள் அங்கு விதிக்கப்படுகின்றன. அந்த வகையில்தான் வடகொரியாவில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு கொடூர ரூல்ஸ் உள்ளதாம். அதாவது, வடகொரிய மக்கள் அனைவரது வீடுகளிலும் கிம் ஜாங் உன் புகைப்படம் இருக்க வேண்டுமாம்.. இந்த புகைப்படத்தில் தூசு, அழுக்கு இருந்தால் கூட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமாம்.
உலகின் மர்ம பிரதேசமாக வடகொரியா உள்ளது. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளி உலகுக்கு தெரிவது இல்லை. வடகொரிய மக்களுக்கும் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் கிடையாது. பெரிய திறந்தவெளி சிறை போல மொத்த நாட்டையும் நிர்வகித்து அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவை பொறுத்தவரை அந்த நாட்டில் பல விசித்திரமான சட்டங்கள் இருப்பதாக கேள்வி பட்டு இருப்போம்..
ஆடை அணிவது, முடிவெட்டுவது, வெளிநாட்டு சினிமாக்கள் பார்க்க தடை என பல கடுமையான கெடுபிடிகளும் அந்த நாட்டில் உள்ளன. இதற்கெல்லாம் மேலாக ஒரு கொடூர சட்டமும் அந்த நாட்டில் இருப்பதாக வடகொரியாவில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஜோ ரோகன் என்ற பெண், வடகொரியாவில் இருந்து வெளியேறிய பெண்ணுடன் உரையாடல் நடத்தி வெளியிட்டுள்ளார்.
இதில், வடகொரியாவை சேர்ந்த பெண் என்று சொல்லப்படுபவர் வெளியிடும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அந்த பெண் கூறியதாவது:- வடகொரியாவில் அனைவரது வீடுகளிலும் கிம் ஜாங் உன் படத்தை வைத்து இருக்க வேண்டும். ஒரு தூசு கூட படியாமல் அந்த படம் இருக்க வேண்டும். திடீரென நள்ளிரவில் கூட வந்து அதிகாரிகள் வீட்டை தட்டி படத்தில் தூசு இருக்கிறதா? என பார்ப்பார்கள்.
அந்த புகைப்படத்தில் ஏதாவது அழுக்கு இருந்தால் அது அரசுக்கு விசுவாசமில்லாத செயலாக கருதப்பட்டு, அந்த நபர் உடனடியாக கைது செய்யப்படுவார். மரண தண்டனை கூட இதற்கு விதிக்கப்படலாம். அல்லது குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். ஒருவேளை வீடு தீப்பிடித்தால், கிம் ஜாங் உன் படத்தை தான் முதலில் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகே உயிரை காப்பாற்றிக்கொள்வது பற்றி யோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.