நள்ளிரவில் கல்லூரி மாணவி பலாத்காரம்; தாம்பரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

இந்த செய்தியை பகிருங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என தாம்பரம் கமிஷனர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தி முனையில் பலாத்காரம் செய்துவிட்டு விடியும் வரை அங்கேயே உறங்கிவிட்டு சென்ற வாலிபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரை அடுத்த கோவூரில் 22 வயதான கல்லூரி மாணவியை 20 வயதான வாலிபன் ஒருவன் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், தன்னை பலாத்காரம் செய்தவன் குடி போதையில் இருந்ததை தவிர வேறெந்த அடையாளத்தையும் அப்பெண்ணால் கூற முடியவில்லை.

இதனையடுத்து போலீசார், குன்றத்தூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளின் புகைப்படங்களை சேகரித்து அப்பெண்ணிடம் கொடுத்தனர். அப்போது, மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (20) என்பவரின் போட்டோவை அந்த பெண் உறுதி செய்தார். உடனே சதீஷை பிடித்து விசாரிக்க தனிப்படை இறங்கியது. இந்த நிலையில், வண்டலூர் மீஞ்சூர் சாலையில் பதுங்கியிருந்த சதீஷை போலீசார் வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய சேஸிங்கில் சதீஷின் கை, கால், இடுப்பு எலும்புகள் முறிந்து போயின…

தொடர்ந்து சதீஷிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது, குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதிஷ் பாதிக்கப்பட்ட பெண் வீட்டு வழியே உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அந்த கல்லூரி மாணவி வீட்டு பால்கெனியில் போன் பேசிக்கொண்டிருப்பதை பலமுறை பார்த்துள்ளார். ஆண் நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்களிடம் சதிஷ் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது வழக்கம். இதனால், பாதிக்கப்பட்ட பெண் வீட்டைக்குறித்தும் விசாரித்துள்ளான். அதில், அந்த பெண் வீட்டில் ஆண் துணை இல்லையென்பதை சதிஷ் தெரிந்துகொண்டான்…

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கஞ்சா அடித்துவிட்டு சென்ற சதிஷ் அந்த பெண் வீட்டு கதவை தட்டியுள்ளான்… அக்கா தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இளம்பெண் கதவை திறந்துள்ளார். அப்போது அவரது முகத்தில் பலமாக தாக்கிய சதிஷ் உள்ளே சென்று கதவை சாத்தியுள்ளான்… பின்னர் இளம்பெண்ணிடம் செல்போன், நகை, பணம் ஆகியவற்றை கேட்டுள்ளான்… தன்னிடம் எதுவும் இல்லை என்று அந்த பெண் கூறவே அவரை கத்தி முனையில் பலாத்காரம் செய்ததோடு கஞ்சா போதையில் விடியும் வரை அந்த வீட்டிலேயே படுத்து ஓய்வெடுத்துள்ளான்… மறுநாள் அதிகாலை எழுந்து, விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டிவிட்டு சதிஷ் தப்பியுள்ளான்… சதிஷ் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள தாம்பரம் கமிஷனர் ரவி, ” பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள்” என கூறியுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us