வடகொரியாவில் படுவேகத்தில் பரவும் ஓமிக்ரான்.. 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு தொற்று

இந்த செய்தியை பகிருங்கள்

பியாங்கியாங்: வடகொரியாவில் கடந்த 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா பரவல் ஏற்பட்டது. இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா பரவியது. தற்போது அந்தந்த நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை என வீசி வருகிறது.

ஆனால் கொரோனா நுழையவே முடியாத சில நாடுகளும் தீவுகளும் இருந்ததை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில் கொரோனா நுழையாக நாடாக வடகொரியா இருந்தது. ஆனால் அங்கும் கொரோனா வந்துவிட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு முதல் கொரோனா கேஸ் வடகொரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒரு கேஸும் திடீரென பலியாகிவிட்டார். இதனால் வடகொரியாவில் கொரோனா முதல் பலியும் பதிவாகியிருந்தது. இதையடுத்து வடகொரியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் வடகொரியாவில் கொரோனா கேஸ்கள் மடமடவென உயர்ந்தன. கடந்த 3 நாட்களில் கொரோனாவால் 8,20,620 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 3 நாட்களில் 42 பேர் பலியாகிவிட்டார்கள்.

3,24,550 பேர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு வடகொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தடுப்பூசி போடாதவர்கள் மூலம் வடகொரியாவில் நாள்தோறும் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பியாங்யாங்கில் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அதிபர் கிம் ஜோங் உன் அணு ஆயுத சோதனை நடத்துவதில் குறியாக இருக்கிறார், அவர் அவ்வாறு செய்யக் கூடாது என அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் நிபுணர்கள் கூறுகையில் வடகொரியாவில் கொரோனா பரவலை மறக்கடிக்கச் செய்வதற்காக அணு ஆயுத சோதனையை கிம் விரைவுப்படுத்துவார் என்றார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us