திருக்கோவிலூர்: 12-ம் வகுப்பு மாணவன் வெட்டி படுகொலை – சக மாணவன் கைது

இந்த செய்தியை பகிருங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் கோகுல். 17-வயதான இவர், திருக்கோவிலூர் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சக மாணவரான கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் மகன் அருண் ஆகாஷ் நேற்று மாலை கோகுல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, நடந்து முடிந்த தனது அண்ணனின் திருமணத்திற்கு பார்ட்டி வைப்பதாகச் சொல்லி, வீட்டிலிருந்த கோகுலை ஸ்கூட்டி வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்றுள்ளார்.

நேற்றிரவு வெகுநேரமாகியும் கோகுல் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், டி.கீரனூர் பகுதியில் புறவழிச்சாலையில் கோகுல் கொலை செய்யப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில், சக மாணவரான கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் மகன் அருண்ஆகாஷை கைது செய்து, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அதில், கோகுலை கத்தியால் குத்தியும், அரிவாளால் பல இடங்களில் வெட்டியும் படுகொலை செய்தது அருண்ஆகாஷ் என்பது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக, என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினர் பற்றியும் கோகுல் அவ்வப்போது மிகவும் இழிவாகப் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த நான் அவனை திட்டமிட்டு கொலை செய்தேன் என்று அருண் ஆகாஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us