மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் மனைவி. அந்த நேரத்தில் யாரும் உள்ளே வந்திராதபடி காவல் காத்து நின்று இருக்கிறார் மகன். சென்னையில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.
சென்னையில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கோவிந்தப்பன் நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். 59 வயதானவர் பெயிண்டராக இருந்து வந்துள்ளார். இவர் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் ராஜேந்திரனை கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்றது தெரியவந்திருக்கிறது. உடனே போலீசார் ராஜேந்திரன் மனைவி வசந்தாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போதுதான் உண்மை வெளியே வந்திருக்கிறது.
ராஜேந்திரனுக்கு மதுப்பழக்கம் இருந்திருக்கிறது. தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ராஜேந்திரனின் நடவடிக்கை தாங்க முடியாமல் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால் ராஜேந்திரன் இறந்தால்தான் தங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற நிலையை எடுத்திருக்கிறார்கள். மருமகன் மகளுடன் சேர்ந்து கணவரை கொன்று விடுவது என்று முடிவு எடுத்து இருக்கிறார் வசந்தா.
சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்திருக்கிறார் ராஜேந்திரன். அப்போது முன்னதாக திட்டமிட்டு இருந்த வசந்தாவும் மருமகன் பிரதாப்பும் தயாராக வைத்திருந்த கயிற்றை எடுத்து ராஜேந்திரன் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். அப்போது வெளி ஆட்கள் யாரும் திடீரென்று உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக ராஜேந்திரன் மகள் வாசலில் நின்று காவல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
ராஜேந்திரனை கொலை செய்ததும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்து இருக்கிறார்கள். விசாரணையில் இது தெரிய வந்ததும் ராஜேந்திரன் மனைவி வசந்தா, மருமகன் பிரதாப் , மகள் ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விட்டனர்.
மகள் மருமகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியின் செயல் மதுரவாயில் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.