ஃபர்ஹானா படத்தால் ஏற்பட்ட விவகாரம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு !

Spread the love

ஃபர்ஹானா படத்திற்கு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா இஸ்லாமிய பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் ஃபர்ஹானா திரைப்படம் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதாகவும், அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை வெளியிட தடை செய்யவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் எதிர்புகளை பதிவு செய்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இப்பட சர்ச்சை காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

படத்தில் எந்த தவறான தகவலும் சொல்லப்படவில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த பிறகும் போராட்டம், எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தயவு செய்து படத்தை பார்த்துவிட்டு குறை கூறுங்கள் என இயக்குநர் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.