நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படமான ‘ஏகே 64’ குறித்த அப்டேட்காக ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு சூப்பரான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரனிடம் ‘ஏகே 64’ படத்தைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று உறுதியாகக் கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – நடிகர் அஜித்குமார் கூட்டணி இந்தப் படத்திற்காக இணைகிறது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அஜித் தனது கார் ரேஸிங் பணிகளை முடித்து வந்தவுடன், படப்பிடிப்பு தொடங்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் ஆதிக்கே நேரடியாக அப்டேட் வெளியாகும் மாதத்தைத் தெரிவித்திருப்பது, ரசிகர்களின் காத்திருப்புக்கு இனிமை சேர்த்துள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாகும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.