நடிகர்-இயக்குநர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இயக்கியுள்ள “இட்லி கடை” திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் கதை குறித்த சர்ச்சையும், அவர் மீதான தனிப்பட்ட ட்ரோல்களும் சூடுபிடித்துள்ளன.
கடந்த வாரம் வெளியான படத்தின் ட்ரெய்லர், ‘குக் வித் கோமாளி’ புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட கதை போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘இட்லி கடை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனுஷிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
பரிதாபங்கள் கோபி, “கோயம்புத்தூர் பக்கம் ஒரு செஃப் இருக்காரு சார், அவரது கதையை தான் நீங்க படமா எடுக்குறீங்கனு சொல்றாங்க. உண்மையா சார்?” என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த தனுஷ், “இல்லை, அந்த மாதிரி இல்லை. இது என் சொந்தக் கற்பனைதான். என் கிராமத்தில் நான் பார்த்த ஒருசில முக்கியமான கதாபாத்திரங்கள், என் மனதை பாதித்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவான சொந்தமான கற்பனைக் கதை இது,” என்று திட்டவட்டமாக விளக்கமளித்தார்.
முன்னதாக, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தான் சிறு வயதில் இட்லி வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டதாக உருக்கமாகப் பேசியிருந்தார். ‘அப்பா பிரபல இயக்குநர், ஆனாலும் இட்லி வாங்க கஷ்டமா?’ என நெட்டிசன்கள் சிலர் அப்போது அவரை ட்ரோல் செய்தனர்.
அந்த விமர்சனங்களுக்கும் தனுஷ் தற்போது தனது பதிலைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்:
“நான் பிறந்தது 1983-ல். ஆனால், அப்பா (இயக்குநர்) ஆனது 1991-ல் தான். அந்த இடைப்பட்ட 8 வருஷம் கொஞ்சம் வறுமை இருந்ததுதான். நாங்கள் நான்கு பிள்ளைகள் என்பதால், அவர் இயக்குநர் ஆன பிறகும் கூட 1993 வரை அப்பாவுக்கு சிரமமாகத் தான் இருந்தது. 94/95-ல் தான் ஓரளவுக்குச் சரியானது.
“சின்ன வயதில் அதைக் சாப்பிடணும், இதைச் சாப்பிடணும் என அப்பா, அம்மா, பாட்டி என யாரிடம் சென்று காசு கேட்டாலும் உடனே கொடுத்துட மாட்டாங்க.”
“நாங்கள் வீட்டு கஷ்டத்தைப் புரிந்துகொண்ட குழந்தைகள் தான். அதனால் வயலில் வேலை செய்து, பூ பறித்து, அதற்கான கூலியை எடுத்துக்கொண்டு போய் இட்லி வாங்கிச் சாப்பிடுவோம்” என்று தனது சிறு வயது வறுமை குறித்தும், அதைச் சமாளித்த விதம் குறித்தும் உருக்கமான தகவல்களை தனுஷ் வெளிப்படுத்தினார்.