“கூலி” – லோகேஷ் கனகராஜ் படமா? ரஜினியின் ஸ்டைல் மாஸா? – விமர்சனம் இதோ!

“கூலி” – லோகேஷ் கனகராஜ் படமா? ரஜினியின் ஸ்டைல் மாஸா? – விமர்சனம் இதோ!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான “கூலி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் விமர்சனம் இதோ.

கதைக்களம் என்ன?

ஹார்பரில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் நாகார்ஜுனா. சர்வதேச அளவில் டீலிங், கொலை, கொள்ளை என அனைத்தையும் செய்து வருகிறார். மற்றொருபுறம், ஒரு மான்சனை நிர்வகித்து வரும் ரஜினிகாந்த், தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் 30 ஆண்டுகளாக ஒதுங்கியிருக்கிறார்.

இந்த சமயத்தில், ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்யராஜ் மர்மமான முறையில் இறக்கிறார். இது இயற்கையான மரணம் என அனைவரும் நினைக்கும்போது, அது ஒரு கொலை என்பதை ரஜினிகாந்த் கண்டறிகிறார். சத்யராஜின் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய ரஜினிகாந்த் களமிறங்குகிறார்.

நாகார்ஜுனாவுக்காக வேலை பார்த்த சத்யராஜின் மரணம், நாகார்ஜுனாவின் சாம்ராஜ்யத்தை நோக்கி ரஜினியை இழுத்துச் செல்கிறது. ரஜினிகாந்த் உண்மையிலேயே யார்? சத்யராஜின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதே மீதிக் கதை.

படத்தின் பலம் மற்றும் பலவீனம்!

மாஸ் ரஜினி! ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடன், மாஸாக நடித்திருக்கிறார். இதில் எந்த குறையும் இல்லை. வில்லன் நாகார்ஜுனா தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருந்தாலும், அனல் பறக்கும் வில்லத்தனம் இல்லை என்பது ஏமாற்றம்.

மிரட்டிய சௌபின் சாஹிர்! படத்தில் நம்மை மிகவும் கவர்ந்தது நடிகர் சௌபின் சாஹிரின் மிரட்டலான நடிப்புதான். முதல் காட்சியில் இருந்து தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் மற்றும் ரசித்தா ராம் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தியுள்ளனர்.

ஏமாற்றிய லோகேஷ்? ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனது திரைக்கதையால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய லோகேஷ், இந்த முறை ஏமாற்றத்தை அளித்துள்ளார். படத்தின் நீளம், சில குழப்பமான காட்சிகள் மற்றும் லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள் படத்தை சலிப்படையச் செய்கின்றன.

படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் குறைவாக இருப்பது பெரிய குறையாகத் தெரிகிறது. அமீர் கான், சத்யராஜ், உபந்திரா போன்ற சிறந்த நடிகர்கள் இருந்தாலும், அவர்களின் கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை. குறிப்பாக, சத்யராஜ் மற்றும் உபந்திராவின் கதாபாத்திரங்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சண்டைக்காட்சிகள் சொதப்பல்! சண்டைக்காட்சிகள் படத்தில் பெரிய பின்னடைவாக உள்ளன. ரஜினிகாந்த் ஒரே இடத்தில் நிற்க, ரவுடிகள் வரிசையாக வந்து அடி வாங்குவது நம்பும்படியாக இல்லை. பூஜா ஹெக்டேவின் மோனிகா பாடல் கலர்புல்லாக இருந்தாலும், அது படத்தின் கதைக்கு அவசியமில்லாததாகத் தெரிகிறது. இந்த அம்சங்கள், ‘இது லோகேஷின் படம்தானா?’ என்ற கேள்வியை எழுப்புகின்றன.

பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் அனிருத்தின் இசை! படத்தில் சிறப்பான அம்சங்களாக, பிளாஷ்பேக் காட்சிகள், 80-களின் பின்னணியில் ரஜினிக்கான மாஸ் தருணங்கள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை ஆகியவை உள்ளன. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

மொத்தத்தில், ரஜினியின் ஸ்டைல் மற்றும் சௌபின் சாஹிரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும், லோகேஷின் வழக்கமான திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றம் என்றே கூறலாம்.