ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் ஓடியது. ஆனால், இப்போதெல்லாம் ஒரு படம் ஒரு வாரத்தைக் கடப்பதே அரிதாகிவிட்டது. முதல் காட்சி முடிவதற்குள்ளேயே விமர்சனங்கள் வந்து, படத்தின் வெற்றி கேள்விக்குறியாகிவிடுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் படங்கள் தோல்வியடைவதாக திரைத்துறையினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு யூடியூபர்கள் மற்றும் சில நடிகர்களின் சதிச்செயல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டத்தில் வடிவேலுவின் பேச்சு முக்கியமானதாக இருந்தது. சமூக வலைத்தளங்களில், யூடியூபர்கள் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு ஒரு படத்தை தோல்வியடையச் செய்வதாகவும், இதற்குப் பின்னால் சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பங்கு இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார்.
“10 பேர் சினிமாவை அழிக்கிறார்கள்”
கூட்டத்தில் பேசிய வடிவேலு, “பணத்தைப் பெற்றுக்கொண்டு படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். ஒரு 10 பேர் சேர்ந்து ஒட்டுமொத்த சினிமாவையும் அழித்து வருகிறார்கள். யூடியூப் தளத்தை வைத்துக் கொண்டு, திரைக்கலைஞர்களைத் தவறாகப் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும். போர் கால அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.
“போட்டி நடிகர்களின் சதி”
மேலும், “சினிமா துறையில் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் எனப் பாகுபாடு பார்க்காமல் தவறாகப் பேசும் யூடியூபர்களுக்கு நடிகர் சங்கம் ஆப்பு வைக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்பவர்களுக்கு சிலர் உடந்தையாக இருக்கிறார்கள். சிலர் தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, போட்டி நடிகர்களின் படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி, அவற்றை தோல்வியடையச் செய்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
“தூங்க விடாமல் நெருக்கடி கொடுக்க வேண்டும்”
“நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அவதூறு பரப்புவோருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அவர்களைத் தூங்க விடக் கூடாது. முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிடுவதை முறைப்படுத்த வேண்டும். மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்று நான் ஊரில் இல்லாததால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. விரைவில் அவரது வீட்டிற்குச் செல்வேன்” என்றும் வடிவேலு கூறினார்.
வடிவேலுவின் குற்றச்சாட்டுகளுக்கு மற்றவர்களின் பதில்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பூச்சி முருகன், “வடிவேலு அண்ணா சொன்னது நியாயம்தான். நாங்கள் ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் சங்க உறுப்பினர்களைத் தவறாகப் பேசும் நபர்கள் மீது சட்டப்படி காவல் துறையில் புகார் அளிக்கிறோம். தமிழக அரசும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, இதுவரை 3-4 பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்று கூறினார்.
நடிகர் விஷால் பேசும்போது, “வடிவேலு அண்ணா சொன்னாரா இல்லையா என்பதை விட, சக நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக அவர் குரல் கொடுத்துள்ளார். இதையும் வைத்து வீடியோ போடுவார்கள். எங்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். நாங்கள் சுயமாக உழைத்துச் சம்பாதிக்கிறோம். அவர்கள் எங்களைப் பற்றிப் பேசி சம்பாதிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்களைத் திருத்த முடியாது. சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
சங்கத் தலைவர் நாசர், “விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அந்தத் துறையை நன்கு அறிந்து அறிவுபூர்வமாக விமர்சித்தால் அது எங்களுக்கு வளர்ச்சிக்கு உதவும். அப்படி இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை, படுக்கை அறை வரை செல்வதுதான் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. இது யாருக்கும் உதவாது” என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.