நடிகர் தனுஷ் தன் பாலிவுட் அறிமுகப் படமான ‘ராஞ்சனா’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை AI தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம், பட வெளியீட்டு நிறுவனத்தின் ஒருதலைப்பட்சமான முடிவு என்றும், இது கலைக்கும் கலைஞர்களுக்கும் ஆபத்தான விஷயம் என்றும் அவர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
2013-ல் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான ‘ராஞ்சனா’ திரைப்படம், தனுஷுக்கு பாலிவுட்டில் ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. தமிழிலும் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் கிளைமாக்ஸ் காட்சி AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை AI மூலம் மாற்றியிருப்பது என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது என்னை மிகவும் பாதித்துள்ளது. இந்த மாற்றம் படத்தின் தன்மையையும், உணர்வையும் முற்றிலுமாக சிதைத்துவிட்டது. சம்பந்தப்பட்டவர்களிடம் நான் இதற்கு என் எதிர்ப்பை ஏற்கெனவே தெரிவித்தேன். AI மூலம் ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவாகக் கூறினேன். ஆனாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘ராஞ்சனா’ இதுவல்ல. கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி, அப்படத்தின் உண்மையான ஆன்மாவையே எடுத்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் செயலை சினிமா உலகிற்கு ஒரு ஆபத்தான விஷயமாக அவர் சுட்டிக்காட்டினார். “AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு படைப்பை மாற்றுவது, கதை சொல்லுதல் மற்றும் சினிமா போன்ற கலை வடிவங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இதுபோன்ற செயல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனுஷ் வலியுறுத்தியுள்ளார்.
‘ராஞ்சனா’ படத்தின் மிகப்பெரிய பலமே அதன் உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் காட்சிதான். தனுஷின் கோபத்துக்கு அதுவே முக்கிய காரணம். இந்த மாற்றம் படத்தின் தனித்தன்மையைக் கெடுத்துவிட்டதாக ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர். தனுஷின் அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. அவரது நியாயமான கோபத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.