நடிகர் அஜித் குமார் தற்போது கார் பந்தயத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர், அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் ஒரு அணியை நடத்தி வருகிறார். பல்வேறு முன்னணி பந்தயங்களில் அவரது அணி பங்கேற்று பல வெற்றிகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது.
வெற்றி மேடைக்கு வரும்போதெல்லாம், அஜித் தனது கைகளில் இந்திய தேசியக் கொடியை பெருமையுடன் ஏந்திச் செல்வது வழக்கம்.
சமீபத்தில், ஊடகத்தினரிடம் பேசிய அஜித் ஒரு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார். அவர், “தயவுசெய்து என்னை ப்ரமோட் செய்யாதீர்கள். அதற்கு பதிலாக, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ப்ரமோட் செய்யுங்கள். இந்த விளையாட்டில் இருக்கும் கஷ்டங்களையும், சவால்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் நேரில் பார்ப்பதை அப்படியே எழுதுங்கள்.” என்று கூறினார்.
அவர் மேலும், “மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் கடினமானது. இதில் ஜாலியான விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் ஒருநாள், நிச்சயமாக இந்திய வீரர்கள் ஃபார்முலா 1 சாம்பியன்களாக வருவார்கள். அதனால், நம் நாட்டின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஊக்கமளியுங்கள்” என்றும் தெரிவித்தார்.
அஜித் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.