நடிகை சாக்ஷி அகர்வால், தான் ஆர்டர் செய்த சைவ உணவில் அசைவம் கலந்திருந்ததாகக் கூறி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மூன்று படங்களை கைவசம் வைத்து பிசியாக இருக்கும் சாக்ஷி, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் பாலக் பன்னீர் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், அவருக்கு வந்த பார்சலில் பன்னீருக்குப் பதிலாக சிக்கன் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து, “நான் பிறந்தது முதல் அசைவம் சாப்பிட்டதில்லை. புரட்டாசி மாதத்தில் இப்படி நடக்குமா? இந்த ஸ்விக்கி நிறுவனம் இன்று என்னை அசைவம் சாப்பிட வைத்துவிட்டது” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய சாக்ஷி அகர்வால், அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறியதாக இருந்ததால், அட்லீ தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாராவின் தோழியாகவும், ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில் அவரது மருமகளாகவும் சிறிய வேடங்களில் நடித்தார்.
‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார். பின்னர், ஆர்யாவுடன் ‘டெடி’, சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ ஆகிய படங்களில் நடித்தார். அண்மையில் வெளியான ‘ஃபயர்’ திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சாக்ஷி அகர்வால், தனது நீண்ட நாள் நண்பரான நவனீத் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது, மலையாளத்தில் ‘தி கேஸ் டைரி’ மற்றும் தமிழில் ‘கெஸ்ட்: சாப்டர் 2’, ‘தி நைட்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.