‘ஜனநாயகன்’ படத்தில் “மாஸ்” இயக்குநர்கள் – அட்லீ, லோகேஷ், நெல்சன்!

‘ஜனநாயகன்’ படத்தில்  “மாஸ்” இயக்குநர்கள் – அட்லீ, லோகேஷ், நெல்சன்!

தளபதி விஜய் நடிக்கும் “ஜனநாயகன்” திரைப்படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கௌரவ வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தனது கடைசிப் படமாக “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்கும் இந்தப் படம், 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தில், லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் பத்திரிக்கையாளர்களாக சிறப்புத் தோற்றத்தில் தோன்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தனது திரைப்பயணத்தில் இந்த மூன்று இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார். அட்லீ இயக்கத்தில் “தெறி”, “மெர்சல்” மற்றும் “பிகில்” என மூன்று வெற்றிப் படங்களை வழங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” மற்றும் “லியோ” ஆகிய படங்களிலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்திலும் விஜய் நடித்திருந்தார். இந்த இயக்குநர்கள் மூவரையும் விஜய் “மை பாய்ஸ்” என்று அன்புடன் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று இயக்குநர்களும் ஒரே படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியல் வாழ்க்கையில் முழுமையாக நுழைவதற்கு முன், தனது சினிமா பயணத்திற்கு ஒரு சிறப்பு விடை கொடுக்கும் வகையில், இந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.