பவித்ரா லட்சுமிக்கு நேர்ந்தது என்ன? உடல்நிலை பாதிப்பு காரணமா? ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த நடிகை பவித்ரா லட்சுமி, சமீப காலமாக தன்னைப்பற்றி பரவி வரும் தவறான செய்திகள் குறித்து மனம் திறந்து உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘ஓகே கண்மணி’, ‘நாய் சேகர்’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய பவித்ரா லட்சுமி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதன் காரணமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் உடல் எடை குறைந்தது மற்றும் தனது உடலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். உண்மையில் தான் கடுமையான உடல்நல பாதிப்புக்கான சிகிச்சையில் இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து உண்மையான அக்கறையுடனும், அன்புடனும் விசாரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்கள் தன்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கும் வாழ்க்கை இருக்கிறது என்றும், தனது எதிர்காலத்தை வழிநடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வதந்திகளைப் பரப்பி தனது கடினமான சூழ்நிலையை மேலும் கடினமாக்க வேண்டாம் என்றும் பவித்ரா லட்சுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.