திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் ரவி மோகன், தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். ஒருபுறம் மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து வழக்கு, மறுபுறம் பாடகி கேனிஷாவுடன் ஜோடி சேர்ந்து திருப்பதி தரிசனம், இன்னொரு புறம் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட உள்ளதாக வங்கி அனுப்பிய நோட்டீஸ் என அவருடைய வாழ்க்கை அலைக்கழிக்கப்பட்டுள்ளது.
ரவி மோகன் மற்றும் கேனிஷா, சமீபத்தில் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் ஜோடியாகக் கலந்துகொண்ட நிலையில், இப்போது இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
அதே நேரத்தில், ரவி மோகன் குறித்த மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள தனது சொகுசு பங்களாவை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்கான தவணையை (EMI) கடந்த 10 மாதங்களாக அவர் செலுத்தவில்லை. இதனால், அந்த பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்டிஎப்சி வங்கி (HDFC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தச் செய்தி, சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில், திருப்பதிக்குச் சென்று அவர் சாமி தரிசனம் செய்தது, தனது பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகவா அல்லது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகவா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.